சிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை வெற்றி

சிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 10 விக்கெட்களால் வெற்றி

by Staff Writer 23-01-2020 | 8:58 PM
Colombo (News 1st) சிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது. ஹராரேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐந்தாம் நாளான இன்று இறுதித் தருணத்தில் சிம்பாப்வே நிர்ணயித்த 14 ஓட்டங்கள் இலக்கை இலங்கை அணி விக்கெட் இழப்பின்றிக் கடந்தது. முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே 358 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, பதிலளித்தாடிய இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 519 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 157 ஓட்டங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்வே விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. சுரங்க லக்மாலின் அபார பந்துவீச்சில் 11 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. எனினும், பிரென்டன் டெய்லர் 38 ஓட்டங்களையும், அணித்தலைவர் சேன் வில்லியம்ஸ் 39 ஓட்டங்களையும் பெற்று சிம்பாப்வே அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள வழி செய்தனர். கடைசி 3 விக்கெட்களும் 6 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட சிம்பாப்வேயின் இரண்டாம் இன்னிங்ஸ் 170 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது. அதற்கமைய, சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் முன்னிலை பெற இலங்கை அணியின் வெற்றி இலக்கு 14 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன், அதற்காக 15 ஓவர்கள் கிடைத்தது. அந்த இலக்கை நோக்கி இலங்கை சார்பாக ஓஷத பெர்னாண்டோ மற்றும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஜோடி களமிறங்கியது.