நிறைக்கழிவுடன் மரக்கறிகள் கொள்வனவு: முல்லைத்தீவு விவசாயிகள் விசனம் 

by Staff Writer 22-01-2020 | 9:06 PM
Colombo (News 1st)  முல்லைத்தீவு மாவட்டத்தில் மரக்கறி செய்கையாளர்கள் பல சாவல்களை எதிர்நோக்கியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் நெற்பயிர் செய்கை போலவே மரக்கறி செய்கையும் பெருமளவில் இடம்பெற்று வருகின்றது. இங்கு பயிரிடப்படும் மரக்கறிகளை சந்தையில் மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்யும் போது 10 வீத நிறைக்கழிவுடன் அவை கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். 100 கிலோகிராம் மரக்கறியை சந்தைக்கு கொண்டு சென்றால், அவற்றில் 10 கிலோகிராம் நிறை குறைப்பு செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். பல இன்னல்கள் மற்றும் இயற்கை சவால்களுக்கு மத்தியில் விளைச்சல் செய்த போதிலும் இவ்வாறு நிறைக்கழிவுடன் மரக்கறிகளை பெற்றுக்கொள்வதால் தாம் நட்டத்தை எதிர்நோக்குவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டனர். இயற்கையுடன் போராடி அறுவடை செய்த மரக்கறி வகைகளை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான நடைமுறையை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாகும்.