தமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்

by Bella Dalima 22-01-2020 | 7:39 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லம் மற்றும் வாகனம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி இரண்டு வருடங்களின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், 2017-இல் தமக்கு மாளிகை வழங்கப்பட்டதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியின் கீழ் வாடகைக்கு மாளிகையொன்றையும் பணியாளர்களையும் அமர்த்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முன்வைத்ததாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். தாம் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மாளிகையில் தொடர்ந்தும் வசிக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவையோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ அனுமதிக்குமாறு கோரவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு சலுகையாக தனக்கு வழங்கப்பட்ட CAT- 1094 என்ற இலக்கமுடைய பென்ஸ் ரக காரை 2019 ஜனவரி முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சம்பந்தன் மேலும் தெரிவித்தார். இரண்டு வருடங்களாக தன்னிடம் இருந்த அந்த காரை 2082 கிலோமீட்டர்கள் மாத்திரமே தாம் பாவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உண்மையாக என்ன நடந்தது என்பது தனக்கு தெரியும் எனும் நிலையில், இவ்வாறான அழுக்கான சூழல் தொடரக்கூடாது என சம்பந்தன் பாராளுமன்றில் வலியுறுத்திக் கூறினார். இதேவேளை, சம்பந்தன் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் பதிவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அனைத்து வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்தன, இந்த விவகாரத்தில் அரசாங்கம் பக்கசார்பாக செயற்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அனைத்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர்களது பதவி தொடர்பில் வழங்கப்பட்ட வசதிகளில் சாதாரண நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.