ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்

by Bella Dalima 22-01-2020 | 8:40 PM
Colombo (News 1st) தற்போது அதிகம் பேசப்படுகின்ற தலைப்புக்களில் ஒன்றாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளமும் காணப்படுகிறது. அரசாங்கம் உறுதியளித்தவாறு இந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னமும் 38 நாட்களேயுள்ளன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. முதற்சுற்று பேச்சுவார்த்தையில் இந்த சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்காத நிலையில், விடயம் தொடர்பில் மீண்டும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்ற முடியும் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி இளையதம்பி தம்பையா குறிப்பிட்டார். அந்த சட்டத்தை பெருந்தோட்ட தொழில்துறைக்கு மட்டும் இயற்ற முடியாது. இலங்கையில் ஆகக்குறைந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக ஒரு தொழிலாளிக்கு இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டால், அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. சாதாரண பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் அந்த சட்டத்தை ஆக்க முடியும் என இளையதம்பி தம்பையா சுட்டிக்காட்டினார். அவ்வாறு திருத்தத்தை கொண்டு வந்தால், கூட்டு ஒப்பந்தத்தில் கூட ஆயிரம் ரூபாவிற்கு குறைவான சம்பளத்தை தீர்மானிக்க முடியாது என அவர் கூறினார். எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு தோட்ட நிறுவனங்கள் இணங்காத நிலையில், அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கண்டியில் ஊடகவியலாளர்கள் அது தொடர்பில் வினவினர்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வரி நிவாரணம், உர மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே, அவர்களால் அதனை வழங்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது. அவர்களால் செலுத்த முடியாது என கூறினால் அதனையும் செவிமடுக்க அரசாங்கம் தயார். இது தமக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என நினைத்து தோட்டங்களை கைவிடுவதற்கு நிறுவனங்கள் தீர்மானித்தால் அந்த தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்று செயற்றிறனை அதிகரித்து, தேவையான திட்டங்களை வகுக்கும்
என மைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.