தமிழக அரசின் தீர்மானத்தை அறிவிக்க காலக்கெடு

ராஜிவ் கொலை வழக்கு: எழுவரின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தை அறிவிக்க காலக்கெடு

by Bella Dalima 21-01-2020 | 3:55 PM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானம் தொடர்பில் இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி எல்.நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ராஜிவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் தொடர்பிலான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை இந்திய மத்திய அரசு கடந்த 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கைக்கும் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கும் எந்த விதமான வித்தியாசத்தையும் காண முடியவில்லை என்ற அதிருப்தியையும் முன்னைய விசாரணையின் போது நீதிபதிகள் வெளிப்படுத்தியிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களில் வழக்கின் விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய தாம் விரும்புவதாக நீதிபதி நாகேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார். இன்று, புதிய நிலவர அறிக்கை குறித்து விசாரணை செய்த நீதிபதிகள், இந்த அறிக்கை, பேரறிவாளன் தரப்பால் பார்க்கப்பட்டதா எனவும் வினவியுள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்வரும் இரு வாரங்களில் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.