மன்னாரில் பெயர்ப்பலகையில் மொழி வரிசை மாற்றம்

மன்னார் பனந்தும்பு உற்பத்தி நிலைய பெயர்ப்பலகையில் மொழி வரிசை மாற்றம்: சிங்களத்திற்கு முதலிடம்

by Staff Writer 21-01-2020 | 8:30 PM
Colombo (News 1st) அமைச்சர் விமல் வீரவன்சவினால் அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட மன்னார் செல்வாரி பனந்தும்பு உற்பத்தி நிலையம் தொடர்பில் இந்நாட்களில் அதிகம் பேசப்படுகின்றது. இந்த நிலையில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அங்குள்ள பெயர்ப்பதாகை மீளமைக்கப்பட்டுள்ளது. மன்னார் - செல்வாரி பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 18 ஆம் திகதி திறந்துவைத்தார். அவர் பெயர்ப்பதாகையை திரைநீக்கம் செய்து வைத்தபோது, அதில் முறையே தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மன்னார் செல்வாரி பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பதாகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை இன்று அவதானிக்க முடிந்தது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பதாகையில் சிங்கள மொழி முதலாவதாவும், தமிழ் மொழி இரண்டாவதாகவும் ஆங்கில மொழி மூன்றாவதாகவும் அமைந்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் இன்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. தமிழும் சிங்களமும் முதன்மையான மொழிகள். இவ்வாறான விடயங்கள் தான் பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.