சீனாவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்

சீனாவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்

by Staff Writer 21-01-2020 | 8:33 AM
Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவும் வேகம் அசாதாரணமான வகையில் அதிகரித்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த வைரஸ் தற்போது சீனாவின் பல நகரங்களிலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸினால் 200 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பீஜிங், ஷங்காய் மக்களும் அதில் அடங்குகின்றனர். வைரஸ் தாக்கத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, மற்றும் தென் கொரியா நாடுகளிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானோருக்கு நியூமோனியா காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத் தரப்பினர், ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு இலகுவாக தொற்றக்கூடியது என தெரிவித்துள்ளனர். லுனா புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு சீன மக்கள் தயாராகியுள்ள நிலையிலேயே, வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இந்த புதிய வைரஸானது சார்ஸ் வைரஸை ஒத்ததாக காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2019 - nCoV என அறியப்படும் புதிய வைரஸ், இதற்கு முன்பு மனிதர்களிடத்தில் பரவியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.