ராஜிதவின் பிணைக்கு எதிரான மீளாய்வு மனுவை பரிசீலிக்க தீர்மானம் 

ராஜிதவின் பிணைக்கு எதிரான மீளாய்வு மனுவை பரிசீலிக்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2020 | 12:27 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி மீளாய்வு விண்ணப்பம் மீதான பரிசீலனை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு ராஜித சேனாரத்னவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினூடாக கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட பிணையினூடாக, விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து சட்டமா அதிபரால் இந்த மீளாய்வு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்னவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னர், கைது செய்யப்பட்டு 3 நாட்கள் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றபோது பிணை வழங்கப்பட்டதாகவும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் மீளாய்வு விண்ணப்பத்தை செல்லுபடியற்றதாக்குமாறு ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிக்கை விடுத்தபோதிலும் அதனை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு போதுமான விடயங்கள் மீளாய்வு மனுவில் உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பம் தொடர்பான ஆட்சேபனையை எதிர்வரும் 10ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு ராஜித சேனாரத்னவிற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான எதிர் மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ராஜித சேனாரத்னவிற்கு அறிவித்தல் பிறப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்களை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்