குரல் பதிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 20-01-2020 | 3:04 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளில் நீதிமன்றம் தொடர்பில் வௌியாகியுள்ள விடயங்கள் குறித்து பிரதம நீதியரசர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார். இந்தக் குரல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே முரண்பாடு ஏற்படாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (20) முற்பகல் அலரிமாளிகையில் இலத்திரனியல் ஊடக செய்திப்பிரிவு அதிகாரிகளை சந்தித்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ள நிவாரணங்கள் காரணமாக எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவு படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் தொடர்பில் பிரதமரும் அமைச்சர் பந்துல குணவர்தனவும் இதன்போது நீண்ட விளக்கத்தை அளித்துள்ளனர். கடனை மீளச் செலுத்தத் தவறிய தொழில்முயற்சியாளர்களின் சொத்துக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதை டிசம்பர் மாதம் வரை இடைநிறுத்துமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக 10 வீத சலுகை வட்டியில் 300 மில்லியன் ரூபா வரை கடன் வசதிகளை வழங்குமாறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் அலோசனை வழங்கியுள்ளது. இதேவேளை, ஈரான் - அமெரிக்க நெருக்கடி காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துவருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மக்களுக்கு பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எண்ணெய் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்பட்டால் அது அரச வருமானத்தை பாதிக்கும் என அமைச்சர் கூறியுள்ளார். தொடர்ந்தும் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தால் எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, MCC உடன்படிக்கைக்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் வாய்மூலம் சில இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார். லலிதசிறி குணருவன் தலைமையில் குழுவொன்றை நியமித்து இந்த உடன்படிக்கை தொடர்பில் முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர் தீர்மாமொன்றை எடுப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.