தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2020 | 7:08 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில், தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

23 பெருந்தோட்ட நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக அமைச்சர் ரமேஷ் பத்தரண குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உடனடியாக 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத நிலை நிலவுவதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் உள்ளிட்ட ஏனைய நிவாரணங்கள் தொடர்பில் இதன்போது அரசாங்க தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறினார்.

இந்தக் கலந்துரைடலின்போது பெருந்தோட்டக் கைத்தொழில் துறையின் உற்பத்தித் திறனை அதிகரித்து மக்களுக்கு இலாபத்தை பகிர்ந்தளிக்ககூடிய திட்டமொன்று தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்