GSP+ வரிச்சலுகையை ​தொடர்ந்தும் வழங்க இணக்கம்

GSP+ வரிச்சலுகையை ​தொடர்ந்தும் வழங்க இணக்கம்

by Staff Writer 19-01-2020 | 1:36 PM
Colombo (News 1st) GSP Plus வரிச்சலுகையை 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சு கூறியுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்பட்டாலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவரும் அரசியல், வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் தலைவருமான த்ரோஸ்டன் பர்க்ஃபெட் கூறியுள்ளார். நாட்டின் ஆடைத்தொழிற்துறைக்கே, GSP Plus வரிச்சலுகை அதிகமாக வழங்கப்படுகின்றது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 43 வீதத்தை ஏற்றுமதி ஆடைத் தொழிற்றுறையே பூர்த்தி செய்வதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார். ஆடைத்தொழிற்துறை ஏற்றுமதியூடாக வருடாந்தம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கின்றது. இதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.