தொழிற்பேட்டையாக மாறும் திருகோணமலை துறைமுகம் 

திருகோணமலை துறைமுகத்தை தொழிற்பேட்டையாக மாற்ற நடவடிக்கை

by Staff Writer 19-01-2020 | 1:12 PM
Colombo (News 1st) திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய பகுதியை தொழிற்பேட்டை மற்றும் சுற்றுலா வலயமாக மாற்றுவது குறித்து ஆராய விசேட குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இதற்கு தகுந்த திட்டங்களை வகுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பது, இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றுவதாக அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி.கே. மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜொன்ஸ்ட்ன் பெர்னாண்டோ நேற்று திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றிருந்தார். திருகோணமலை துறைமுகத்தை தனியார் துறையினருக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் உள்ளதா என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டையை வழங்கியதை போன்று தனியாருக்கு நாங்கள் வழங்கப்போவதில்லை. அது தேசிய குற்றமாகும், அவ்வாறு செய்தவர்களுக்கு சாபம் கிடைக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழுள்ள இந்த அரசாங்கமானது நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கமல்ல, சொத்துக்களை காப்பாற்றுவதற்கு வந்த அரசாங்கமிது. ஐக்கிய தேசியக் கட்சியின் நல்லாட்சியிலேயே தனியாருக்கு வழங்கப்படவிருந்தது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்துள்ளார்.