உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து

சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

by Staff Writer 19-01-2020 | 2:01 PM
Colombo (News 1st) ஒழுக்கத்தை மீறிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 இற்கு மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் தீர்மானங்களை மீறி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஆதரவு தெரிவித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஒழுக்க விதிகளை மீறிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஶ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு எதிர்வரும் முதலாம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளது. கட்சியின் தீர்மானங்களை மீறி வேறு கட்சிகளுடன் சேர்ந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு நேற்று முற்பகல் கொழும்பு டாலி வீதியிலுள்ள தலைமையகத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.