உலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு

உலகின் குள்ள மனிதர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழப்பு

by Bella Dalima 18-01-2020 | 7:07 PM
Colombo (News 1st) நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உலகிலேயே மிகக் குள்ளமான மனிதர் ககேந்திர தபா (27 வயது) நேபாளத்தைச் சேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவரது உயரம் 67.08 சென்டி மீட்டர். இவரது மொத்த உடல் எடையே வெறும் 6 கிலோதான். கடந்த 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிகக் குள்ளமான மனிதராக இவர் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. கடந்த ஆண்டு வரை உலகின் குள்ளமான மனிதர் என்ற பட்டத்தை இவர்தான் தக்கவைத்திருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்ரே என்பவர் 59.93 சென்டிமீட்டர் உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், நேபாளத்தின் ககேந்திர தபா தனது குள்ள மனிதர் பட்டத்தை இழந்தார். கின்னஸ் சாதனை படைத்ததால் உலகின் சில நாடுகள் அவரை அழைத்து கௌரவித்தன. என்றாலும், நேபாளத்தில் அவர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, ககேந்திர தபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், நேற்று (17) பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற்றன.