கனடாவின் நியூபவுண்ட்லாந்தில் அவசரகால நிலை பிரகடனம்

அதிக பனிப்பொழிவால் கனடாவின் நியூபவுண்ட்லாந்து மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம்

by Bella Dalima 18-01-2020 | 5:26 PM
Colombo (News 1st) அதிக பனிப்பொழிவினால் கனடாவின் நியூபவுண்ட்லாந்து (Newfoundland) மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவதானமாக செயற்படுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். கனடாவின் நியூபவுண்ட்லாந்து மாகாணத்தில் நேற்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அதிக பனிப்பொழிவின் காரணமாக வர்த்தக நிலையங்களை மூடுமாறும் மக்களை வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். வீதிகளில் சுமார் 2 அடி வரை பனி படர்ந்துள்ளதுடன் வாகனங்களும் பனியினால் மூடப்பட்டுள்ளன. சில பகுதிகளுக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இதேவேளை, உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். தமது ட்விட்டர் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள கனேடிய பிரதமர், தேவையேற்படும் பட்சத்தில் சகல உதவிகளையும் வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.​