ஏப்ரல் 21 தாக்குதல்: அடையாளத்தை வௌிப்படுத்தா வகையில் சாட்சி விசாரணை

ஏப்ரல் 21 தாக்குதல்: அடையாளத்தை வௌிப்படுத்தா வகையில் சாட்சி விசாரணை

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2020 | 8:08 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள சந்தேகநபரொருவர் சாட்சி விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டின் நான்காம் இலக்க குற்றவியல் சட்டத்தின் கீழ் சாட்சியாளரின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வௌியிட வேண்டாம் என ஆணைக்குழு ஆலோசனை வழங்கியது.

சந்தேகநபரிடம் திறந்த அறையில் சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன், ஆணைக்குழுவிலுள்ளவர்களுக்கு மாத்திரம் தென்படும் விதத்திலும், சபையில் குரல் மாத்திரம் கேட்கும் முறையிலும் சாட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

ஒலி சாதன தொழில்நுட்பம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

இதன்போது, வௌியான தகவல்களுக்கமைய சந்தேகநபர் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றில் பதவி வகித்துள்ளார்.

அவர் துருக்கியிலும் இஸ்ரேலிலும் கல்வி பயின்றுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் 2018ஆம் ஆண்டிலிலிருந்து சஹ்ரானுடன் தொடர்பினை பேணியுள்ளார்.

சஹ்ரானின் காணொளிகளை பார்வையிட்டு அவருடன் தாம் இணைந்து கொண்டதாகவும், சுமார் 150 பேர் சஹ்ரானைப் பின்பற்றியதாகவும் சந்தேகநபர் சாட்சியமளித்துள்ளார். அவர்களே ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியம் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இடைக்கிடையே ஊடகவியலாளர்கள் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டதுடன், ஆணைக்குழு இரகசியமாகவும் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்