அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்பின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானம்

அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்பின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானம்

அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்பின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2020 | 3:42 pm

Colombo (News 1st) அரச பொறிமுறையில் வினைத்திறனின்மை, தாமதம் மற்றும் ஊழல் என்பனவற்றை இல்லாதொழிக்கும் நோக்கில் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்பின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் சேவை வழங்குநர்களிடம் செல்லும் முறைமைக்கு பதிலாக இணையத்தினூடாக குறித்த சேவைகள் மற்றும் அனுமதிகளை வழங்கும் முறைமையொன்றை விரைவில் உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கமைய , அனைத்து அரச நிறுவனங்களிலும் காணப்படும் தரவுகள் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பூரண பங்களிப்புடன் ஒன்று திரட்டப்படும் என்பதுடன், மக்களுடன் நெருங்கி செயற்படும் அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய முறையின் கீழ் , தொழில்நுட்பம் மற்றும் இணைய வழி பாவனையின் ஊடாக அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, பிறப்பு – இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பதிவு செய்தல், அரச காணி உறுதிகள் என பல சேவைகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து தரவுகளும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் போது, நாட்டில் செல்வாக்கு செலுத்தக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்ளும் போது ஏற்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் அரச நிறுவனங்களில் ஏற்படும் தாமதங்களை உடனடியாக தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் நிலையத்தின் 1919 என்ற துரித தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதனூடாக மக்களுக்கு உடனடியாக தகவல்களை வழங்கும் செய்றபாடுகளை மீள செயற்படுத்தல் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

துரிதமாக செயற்படுத்தப்பட வேண்டிய பல நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும் போது அந்தந்த துறைகளில் திறமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கிய கோவையொன்று காணப்படாமை பாரிய தடையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அத்தகையானோரை மிகத்துரிதமாக இனங்கண்டு திறன்கள் குழுவொன்றை உருவாக்குவதற்கான தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இணைந்த சேவையில் மாத்திரமின்றி ஏனைய அரச சேவையாளர்களுக்கும் வெவ்வேறு அரச நிறுவனங்களுக்கும் இடமாற்றம் வழங்குவதற்கான பொதுவான கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்