லயன் எயாரில் வருகை தந்தவருக்கு இன்புளுவன்சா

லயன் எயார் விமானத்தில் வருகை தந்தவருக்கு இன்புளுவன்சா வைரஸ் தொற்று

by Staff Writer 17-01-2020 | 3:52 PM
Colombo (News 1st) லயன் எயார் விமானத்தில் வருகை தந்து சுகயீனமுற்ற நிலையில் தேசிய தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவருக்கு இன்புளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளர் குணமடைந்து வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, லயன் எயார் விமானத்தில் உயிரிழந்த இருவரின் ஜனாஸாக்களும் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 2.4-க்கு லயன் எயார் விமான சேவைக்கு சொந்தமான JT 85 இலக்கமுடைய எயார் பஸ் A330 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்த இரண்டு பயணிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்தே விமானம் தரையிறக்கப்பட்டது. எவ்வாறாயினும், விமானம் தரையிறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதிலிருந்த இரண்டு பயணிகள் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்த பயணிகள் இருவரும் இந்தோனேசிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.