அவன்ற் கார்ட் வழக்கிலிருந்து 5 பிரதிவாதிகள் விடுதலை

அவன்ற் கார்ட் வழக்கிலிருந்து 5 பிரதிவாதிகள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2020 | 8:28 pm

Colombo (News 1st) சட்டப்பூர்வ அனுமதியின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று ஐவரை விடுவித்தது.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ.எகொடவெல, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவி செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன ஆகிய பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளாக பெயரிப்பட்டிருந்த ரக்னா லங்கா மற்றும் அவன்ற் கார்ட் மெரிடைம் நிறுவனங்களும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7573 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த அடிப்படை சட்ட ஆட்சேபனை தொடர்பில் தம்மிக்க கனேபொல, ஆதித்ய படபெதிகே மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

7573 குற்றச்சாட்டுகளில் 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாத்திரமே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சட்ட இயலுமை காணப்படுவதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

விஷ்வஜித் சந்தன தியபலனகே, ஜோன் அல்பர்ட் திலகரத்ன, உக்ரைன் பிரஜை கெனடி கெப்பரி லோ, மேஜர் நிஸங்க சேனாதிபதி, விக்டர் சமரவீர, நிலுபுல் டி கொஸ்தா, பொன்னுத்துரை பாலசுப்ரமணியம் பிரேமச்சந்திரன் மற்றும் சமன் திசாநாயக்க ஆகிய 8 பிரதிவாதிகளுக்கு எதிராகவுமுள்ள 19 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்வதா என்பது குறித்து ஆராயுமாறும் விசேட மேல் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு அறிவித்தது.

ஏழாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விசஸ் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதியை 5 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் நீதிமன்றம் விடுவித்தது.

அவர் நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிபதிகள் குழாம், கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.

அவன்ற் கார்ட் மெரிடைம் சேர்விசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MV அவன்ற் கார்ட் கப்பலில், சட்ட அனுமதி இன்றி சட்டவிரோதமாக 8156 துப்பாக்கிகள் மற்றும் 2,02,925 தோட்டாக்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விடுவிக்கப்பட்டுள்ள 12ஆவது பிரதிவாதியான சுஜாதா தமயந்தி ஜயரத்னவிற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெறுவதற்கான உத்தரவையும் நீதிபதிகள் குழாம் இன்று பிறப்பித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்