SLC-இன் சர்வதேச ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது

by Staff Writer 16-01-2020 | 9:06 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சர்வதேச ஒளிபரப்பு உரிமைக்காக எதிர்வரும் மார்ச் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைக்காக இந்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு அனுப்ப எடுக்கப்பட்ட முயற்சி பகிரங்கமாகி ஒரு வருடமும் நான்கு மாதங்களும் ஆகின்றன. அந்தத் தகவல் வெளியான பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, தென் ஆபிரிக்க விஜயத்திற்காக இந்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய இறுதிக் கொடுப்பனவான 187,000 அமெரிக்க டொலர் நிதி வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க விஜயத்திற்கான ஒளிபரப்பு உரிமைக்காக கிடைக்க வேண்டிய 436,541 அமெரிக்க டொலர் நிதியை Wells Fargo எனும் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய வானொலி ஒலிபரப்பு உரிமை விற்பனையின் போது இடம்பெற்ற மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கணக்காய்வில் தகவல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன. இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை எதிர்வரும் 3 வருடங்களுக்கு வழங்குவதற்காக செயற்படும் பின்புலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் ஆபிரிக்க விஜயத்தின் இறுதிக்கொடுப்பனவான 187,000 அமெரிக்க டொலர் நிதி வைப்பிலிடப்பட்ட BBVA Compass வங்கிக் கணக்கின் உரிமையாளர் Diamond Chanelle Irvin என்பவராவார். அமெரிக்காவின் டெக்சாஸில் சாரதி அனுமதிப் பத்திரத்தின் மூலம் குறித்த வங்கிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளதுடன், வங்கிக் கணக்கின் உரிமை 1993 ஆம் ஆண்டு பிறந்த ஒருவருக்குரியதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 187,000 அமெரிக்க டொலர் நிதி BBVA Compass எனும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அந்த நிதித் தொகையுடன் குறித்த வங்கிக்கணக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஒளிபரப்பு உரிமை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகிவரும் பின்புலத்தில், 3 வருடங்களுக்கான இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நேர்மையாகவும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழுமையான கண்காணிப்பிலும் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரினதும் கருத்தாகும்.