அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தக உடன்படிக்கை 

அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தக உடன்படிக்கையின் ஆரம்ப ஒப்பந்தம் கைச்சாத்து

by Bella Dalima 16-01-2020 | 4:26 PM
Colombo (News 1st) அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையிலான வணிகப் போரை தளர்த்தும் நோக்கில் இரு நாடுகளும் வர்த்தக உடன்படிக்கையின் ஆரம்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன துணைப் பிரதமர் லியூ ஹீ ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த உடன்படிக்கை அமெரிக்க பொருளாதாரத்தை உருமாற்றக்கூடியதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை வெற்றிக்கான உடன்படிக்கை என குறிப்பிட்டுள்ள சீன துணைப் பிரதமர் லியூ ஹீ , இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் எனவும் கூறியுள்ளார். 2017 -ஐ காட்டிலும் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அமெரிக்க ஏற்றுமதிகளை சீனா ஊக்குவிப்பதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார். அத்துடன், அறிவுசார் சொத்துரிமை விதிகளுக்கு வலுசேர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலீடாக சீன உற்பத்திகள் மீது விதித்த தீர்வை வரிகளை சமமாகப் பங்கிட அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தயாரிப்புக்கள், விவசாயப் பொருட்கள், சேவைகளை சீனா பரந்தளவில் கொள்வனவு செய்வதே இந்த முதற்கட்ட ஒப்பந்தத்தின் இலக்காகும். இதற்கமைய, உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையே கடந்த 18 மாதங்களாக நிலவி வந்த வர்த்தக மோதல் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.