பயன்படுத்த முடியாத ரயில் என்ஜின்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாக குற்றச்சாட்டு

by Staff Writer 16-01-2020 | 9:20 PM
Colombo (News 1st) இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரயில் என்ஜின்களை இலங்கையில் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கடன் சலுகையின் கீழ் M11 ரக 10 என்ஜின்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதில் 8 என்ஜின்கள் இதுவரையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 10 ரயில் என்ஜின்களும் 6 பவர் செட்களும் இந்தியாவில் இருந்து 1000 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான இந்திய சலுகைக்கடன் திட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கம் கொள்வனவு செய்தது. நாட்டின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றை இந்தியாவிற்கு அனுப்பி, பரிசீலனை செய்து, விசேட பயிற்சிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் 8 என்ஜின்கள் ஒன்றன் பின் ஒன்றாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. முதற்கட்ட பரிசீலனையின் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு என்ஜின் அண்மையில் தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது. இதன்போது, ரயிலுக்கும் ரயில் மார்க்கத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. இது போன்ற ரயில் என்ஜின்கள் இதற்கு முன்னரும் இறக்குமதி செய்யப்பட்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். வாயுத்தடையுடனான ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியாமற்போனதாக அவர் கூறினார். எனினும், இது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 8 என்ஜின்களில் 4 என்ஜின்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மூன்று என்ஜின்கள் தெரிவு செய்யப்பட்ட, பாதுகாப்பான ரயில் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ஆய்வுக்குழுவினால் ஆய்விற்கு உட்படுத்தி, அவர்களின் சிபாரிசுகளை ஆராய்ந்து, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றதன் பின்னரே இவ்வாறான பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த ரயில் என்ஜினைக் கொண்டு வரும்போது அது நாட்டிற்கு பொருந்துவதாக ஆய்வு செய்த தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் உறுப்பினர்கள் யார்?