கிழக்கு பல்கலைக்கழக மாணவரின் இறுதிக்கிரியைகள்

சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன

by Staff Writer 16-01-2020 | 7:32 PM
Colombo (News 1st) சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர் எஸ்.மோகன்ராஜின் இறுதிக்கிரியைகள் இன்று அவரின் சொந்த ஊரான ஹோல்புரூக்கில் இடம்பெற்றது. மோகன்ராஜின் உடல் நேற்று (15) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் ஹோல்புரூக்கில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை ஹோல்புரூக் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மூன்று பிள்ளைகள் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் மோகன்ராஜ் மூன்றாவது பிள்ளையாவார். பாடசாலைக் காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மோகன்ராஜ், உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் 2A, 1B சித்திகளைப் பெற்று கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். மோகன்ராஜின் தந்தை சின்னத்தம்பி ஹோல்புரூக் பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதேச பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்ற 21 வயதான எஸ். மோகன்ராஜ் கடந்த 9 ஆம் திகதி காணாமற்போயிருந்த நிலையில், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் அவரின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து , பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில், அவர் கடந்த 14 ஆம் திகதி கரையாக்கன் தீவு ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

ஏனைய செய்திகள்