பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 15-01-2020 | 3:48 PM
Colombo (News 1st) மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த குறைந்தபட்ச சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த குறைந்தபட்ச சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வரி நீக்கம், உர மானியம் உள்ளிட்ட பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் அனுகூலத்தை தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.