by Staff Writer 15-01-2020 | 3:41 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இன்று நுகேகொடை நீதவான் வசந்தகுமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நேற்றிரவு வரை விசாரணைகள் இடம்பெற்றாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மாதிவெலயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு தொகுதியில் வைத்து நேற்று மாலை 6.20 அளவில் ரஞ்சன் ராமநாயக்க குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கான பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு நேற்று (14) பிற்பகல் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த பிடியாணையை பெற்றுக்கொண்ட கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்தனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளமையே அவரை கைது செய்வதற்கான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.
அரசியலமைப்பின் 111 ஆவது சரத்தின் கீழ், நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் நபரொருவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.