by Bella Dalima 14-01-2020 | 6:07 PM
Colombo (News 1st) பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி 67 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதுடன், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் பனி படர்ந்ததால், பாரம் தாங்காமல் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளன. மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் மழை மற்றும் பனிப்பொழிவால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பலூசிஸ்தானில் பனிப்பொழிவு மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, நேற்று 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.