நான்கு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

by Staff Writer 14-01-2020 | 8:37 PM
Colombo (News 1st) உலகின் செல்வந்த மற்றும் பலம்பொருந்திய நான்கு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் நால்வர் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்தனர். இது இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற அரிய நிகழ்வுகளில் ஒன்று என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாகும். ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரவ் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தார். இன்று காலை அவர் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் இரு நாடுகளினதும் வௌிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது, இலங்கையின் பாதுகாப்பினை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் உதவத் தயாராக இருப்பதாக ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். மேலும்,  ஹைட்ரோ கார்பன் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா வசதிகளை ஊக்குவிப்பதற்கே இலங்கை ரஷ்யாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அதனை முறையாக மேற்கொள்வதற்காக இலங்கை ரஷ்யாவின் வர்த்தக சமூகத்துடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். இதற்காக சென் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெறவுள்ள சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுமாறு இலங்கைக்கு ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரவ் அழைப்பு விடுத்தார். இதேவேளை, சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் அவர் சந்தித்தார். அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பல்வேறு அரசியல் ரீதியான சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சீன வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் வலுப்பெறுவதே, இந்த சவால்களை வெற்றிகொள்ளும் ஒரே மார்க்கம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கையில் மாற்றம் ஏற்படாது எனவும், இலங்கை எப்போதும் நம்பிக்கையான நண்பன் எனவும் சீன வௌிவிவகார அமைச்சர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. சீனாவின் பழைய நண்பரான கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் வாழ்த்து தெரிவித்த சீன வௌிவிவகார அமைச்சர், அந்நாட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியையும் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு சீன வௌிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று மாலை சந்தித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திப்பதற்கு முன்னர், வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை இன்று காலை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் சீன வௌிவிவகார அமைச்சர் ஈடுபட்டுள்ளார். ரஷ்யா மற்றும் சீன வௌிவிவகார அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஜப்பான் இராஜாங்க அமைச்சர் Kozo Yamamoto-வும் இன்று பிற்பகல் வரை இலங்கையில் தங்கியிருந்ததுடன் அவர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பின்புலத்திலேயே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இன்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தார். அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார். இன்று பிற்பகல் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்தித்தார். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சிலரையும் சந்தித்து கலந்துரையாடியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று பிற்பகல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அமெரிக்காவின் பிரதி உதவி செயலாளர் இன்று சிவில் சமூகத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டது. அவர் நாளை இந்தியாவிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து பின்னர் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளார். அமெரிக்காவின் பிரதி உதவி செயலாளர் தமது விஜயத்தின்போது மனித உரிமைகள், நீதி, ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கான வழிமுறை, சுதந்திர மற்றும் திறந்த இந்திய பசுபிக் பிராந்திய பொது அபிலாசைகள் உள்ளிட்ட பிராந்திய இருதரப்பு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.