அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகிய ஹரி, மேகன்

அரச குடும்ப  சிரேஷ்ட உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய இளவரசர் ஹரி, மேகன்

by Staff Writer 14-01-2020 | 8:20 AM
  Colombo (News 1st) இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோருக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இரண்டாம் எலிஸபெத் மகாராணி அனுமதி வழங்கியுள்ளார். இளவரசர் சார்ள்ஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் நேற்று மகாராணியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்நிலையில், 93 வயதான இரண்டாம் எலிஸபெத் மகாராணி தமது பேரக் குழந்தைகளின் விருப்பத்திற்கு அனுமதி வழங்கி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தமது குடும்பம் உள்ளிட்ட அரச குடும்பம் ஹரி மற்றும் மேகனுக்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக மகாராணி தெரிவித்துள்ளார். எனினும், அரச குடும்பத்துடன் முழு நேரத்தையும் செலவிடுவதையே தாம் விரும்புவதாக எலிஸபெத் மகாராணி கூறியுள்ளார். ஹரி குடும்பத்தினர் பிரித்தானியா மற்றும் கனடாவில் வாழ்வதற்குத் திட்டமிட்டுள்ளதற்கும் இணக்கம் தெரிவித்துள்ள மகாராணி, இது குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளார். அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகவும் பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் முழுநேர பணிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக இளவரசர் ஹரி மற்றும் மேகன் அறிக்கை வௌியிட்டிருந்தனர். அரச குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடாது இருவரும் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.