ரஞ்சன் ராமநாயக்க கைது

ரஞ்சன் ராமநாயக்க கைது

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2020 | 6:19 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நுகேகொடை பிரதம நீதவான் வசந்த குமாரவால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நுகேகொடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை அறிக்கை சமர்ப்பித்தனர்.

விசேட பிரிவின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றுக்கு அறிவித்தார்.

குரல் பதிவினூடாக நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பாரிய அகௌரவம் ஏற்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அரசியலமைப்பின் 111 ஆவது சரத்தின் கீழ், நீதிபதி ஒருவரின் செயற்பாடுகளில் முறையற்ற வகையில் தலையீடு செய்த குற்றச்சாட்டின் கீழ் இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கோரப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிவிரினர் மன்றில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

சாட்சியங்களை ஆராய்ந்த பிரதம நீதவான், அறிவித்தல் பிறப்பிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்கவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா இன்று அறிவித்தார்.

தற்போது சமூக ஊடகங்களில் பரவும் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவுகளினூடாக அவர் நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையீடு செய்துள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், சட்ட மா அதிபரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 111/2 ஆவது பிரிவின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளமையால் சட்ட மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்