வௌிநாட்டுக் கழிவுகளை ஆய்வுசெய்ய வசதியில்லை -அரச இரசாயன பகுப்பாய்வாளர்

by Staff Writer 13-01-2020 | 8:12 PM
Colombo (News 1st) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட குப்பைகள் தொடர்பில் அரச இரசாய பகுப்பாய்வாளர் விடுத்துள்ள அறிவிப்பு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) நீதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கழிவுத்தொகை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளின் மாதிரிகளைப் பெற்று அவை மனித உடலுக்கும் சுற்றாடலுக்கும் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்குத் தேவையான வசதிகள் இல்லையென அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதற்கிணங்க குறித்த அறிவிப்பு தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு உதவி புரியும் வகையில் ஆலோசனைகளை வழங்குமாறு நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு தமது நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்து நீண்ட காலம் சென்றுள்ளபோதிலும், இதுவரை திருப்தியடையக்கூடிய வகையில் செயற்படாமை தொடர்பில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் 13ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதி அமைச்சின் செயலாளருக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளது. குப்பைகளைக் கொண்டுவரப்பட்ட நாடுகளுக்கே திருப்பியனுப்புவது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினர் பிரதிவாதிகள் தரப்புடன் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க மன்றுக்கு அறிவித்துள்ளார். குப்பைகளை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாயின் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது. வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளில் மனிதர்களின் உடல் மற்றும் சுற்றாடலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளதால் அவற்றை அந்த நாடுகளுக்கு மீண்டும் அனுப்புமாறு உத்தரவிடக்கோரி சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.