உக்ரைன் விமான விபத்து: ஈரானில் ஆர்ப்பாட்டம்

உக்ரைன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

by Chandrasekaram Chandravadani 12-01-2020 | 8:31 AM
Colombo (News 1st) உக்ரைனிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் கண்டித்து ஈரானிய தலைநகரில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், 2 பல்கலைக்கழகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைதியாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், பொலிஸாரின் செயற்பாடுகளால் அமைதியின்மையுடன் இடம்பெற்றுள்ளது. தலைமை தளபதி இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோஷமெழுப்பியுள்ளனர். எவ்வாறாயினும் இந்த எழுச்சியான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உக்ரைனிய பயணிகள் விமானத்தை தமது இராணுவமே தவறுதலாகச் சுட்டுவீழ்த்தியதாக ஈரான் நேற்று அறிவித்திருந்தது. இந்தச் சம்பவத்திற்கு மனித தவறே காரணமெனவும் போயிங் - 752 ரக விமானத்தை தமது இராணுவம், விரோதிகளின் இலக்காகக் கருதி தாக்குதல் மேற்கொண்டதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு ஈரானிய அரசாங்கம் தெரிவித்திருந்தது. 3 நாட்களின் பின்னர் ஈரான் தமது தவறை ஏற்றுக் கொண்டுள்ளது. விபத்தில் ஈரான், கனடா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 176 பேர் உயிரிழந்தமை குறிபிடத்தக்கது.