அனைத்து மாவட்டங்களிலும் அரச வைத்தியசாலைகள்

அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான அரச வைத்தியசாலைகள்

by Staff Writer 12-01-2020 | 7:48 AM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு உரித்தான முழுமைபெற்ற வைத்தியசாலையை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, மக்கள் தாம் வசிக்கும் மாவட்டங்களிலேயே தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசிற்கு உரித்தான வைத்தியசாலைகள் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டத்திற்கு உரித்தான பிரதேச வைத்தியசாலைகளிலேயே மக்கள் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். குறித்த வைத்தியசாலைகளில் போதுமான வசதிகள் இல்லாதமையால் மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நோயாளர்கள், தூர பிரதேசங்களுக்கு செல்ல நேரிட்டுள்ளது. இந்நிலையில், புதிய திட்டங்களின் பிரகாரம் மாவட்டங்களிலேயே அரசிற்கு உரித்தான வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.