ETI தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

ETI பைனான்ஸ் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

by Staff Writer 11-01-2020 | 4:52 PM
Colombo (News 1st)  ETI பைனான்ஸ் லிமிட்டட் நிறுவனம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானியூடாக ஜனாதிபதியால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் K.D.சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவிற்கு சுகத கம்லத் மற்றும் D.M.குணசேகர ஆகியோர் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் மாதம்16 ஆம் திகதி வரை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான குறித்த ஆணைக்குழுவில், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் நிதிக்குற்ற பிரிவு அல்லது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு உரிய நடைமுறையை பின்பற்றாது நடவடிக்கை எடுத்தமை, மூன்றாம் தரப்பினரிடமிருந்து அழுத்தங்கள் விடுக்கப்பட்டமை, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை ஆகியவற்றை ஆராய்வதே இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.