ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடிய 3 நீதிபதிகள் குறித்து விசாரணை: நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவிப்பு

by Staff Writer 11-01-2020 | 9:49 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதிகள் மூவர் தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்தது. அதற்கமைய, ஆணைக்குழு கூடி இது தொடர்பில் கலந்துரையாடியதாக கூறப்பட்டது. குறித்த நடைமுறைக்கு அமைய, நீதிபதிகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்தது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுவதுடன், மேலும் இரண்டு ஆணையாளர்களும் அதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவுகள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிட்டது. குறித்த குரல் பதிவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.