உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய ஈரான் 

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

by Bella Dalima 11-01-2020 | 4:02 PM
Colombo (News 1st) உக்ரைன் பயணிகள் விமானத்தை தமது இராணுவமே தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மனிதத் தவறே காரணமெனவும் போயிங் 752 ரக விமானத்தை தமது இராணுவம், விரோதிகளின் இலக்காகக் கருதி தாக்குதல் மேற்கொண்டதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. உக்ரைனிய பயணிகள் விமானமானது மிக முக்கியமான இராணுவத்தளத்திற்கு அருகில் பறந்துகொண்டிருந்ததாக ஈரானிய ஆயுதப்படைகளின் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவுடன் பதற்றநிலை வலுத்துள்ள சூழலில் தமது இராணுவம் எந்தளவிற்கு தயார் நிலையிலுள்ளது என்பதையே இந்த சம்பவம் வௌிப்படுத்துவதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது. 176 பேருடன் பயணித்த உக்ரைன் பயணிகள் விமானமானது, தெஹ்ரானிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்திற்குள்ளானது. விபத்தில் பயணிகள் அனைவருமே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்திற்கான காரணமென ஈரான் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலிலேயே விமானம் விபத்திற்குள்ளானதாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன.