தலைமைத்துவம் தொடர்பான இறுதித்தீர்மானம் 16ஆம் திகதி

ஐ.தே.க-வின் தலைமைத்துவம் தொடர்பான இறுதித் தீர்மானம் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் - அஜித் பீ. பெரேரா

by Staff Writer 10-01-2020 | 3:40 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் எழுந்துள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு காணும் வகையிலான இறுதித் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நேற்று (09) நடைபெற்றது. இதன்போது, கட்சியின் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் கடும் வாதப்பிரதிவாதத்திற்கு மத்தியில் கலந்துரையாடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. தலைமைத்துவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கான நடவடிக்கையும் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த குழுவிலிருந்து விலகுவதற்கு சஜித் பிரேமதாச தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தனர். இந்த பின்புலத்தில் குறித்த குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடலுக்காக சிறிகொத்தவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சுமார் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தில் முதலில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கட்சி பிளவுபட இடமளிக்க முடியாது என வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, கட்சி ஒற்றுமையோடு முன்நோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அந்தப் பொறுப்பை கரு ஜயசூரிய ஏற்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார். தம்முடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கரு ஜயசூரிய இதற்கான இணக்கத்தை தெரிவித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் வாக்குவங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு தொடர்பில் நவீன் திசாநாயக்க கருத்து வௌியிட முயன்றபோது அங்கிருந்த அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர். தலைமைத்துவத்தை கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளீர்களா என பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தாம் தலைமைத்துவத்தில் தொடர்வதாகவும் தலைமைத்துவ குழுவொன்றை நியமித்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ள முடியும் எனவும் இதன்போது ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார். மக்கள் சஜித் பிரேமதாசவையே கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா கூறியதை அடுத்து மீண்டும் அங்கு வாதப் பிரதிவாதம் எழுந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் உறுதியான தீர்மானம் எட்டப்படாத நிலையில், அங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வௌியேறிச் சென்றனர்.