ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் போராட்டம்

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் போராட்டம்

by Bella Dalima 10-01-2020 | 5:07 PM
Colombo (News 1st) ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் போர் வேண்டாம் என தெரிவித்தும் நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசிக் கொன்றது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் இராணுவத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. உலகின் வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம், போர் தொடுக்க வேண்டாம் என நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சிவிக் சென்டரில் நேற்றிரவு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஈரானுக்கு எதிரான போருக்கும் உலக மக்கள் மீதான போருக்கும் நாங்கள் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ என்று பேரணியில் பங்கேற்ற ஒருவர் கூறினார்.