ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொண்டதா உக்ரைன் விமானம்?

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொண்டதா உக்ரைன் விமானம்?

by Bella Dalima 10-01-2020 | 7:42 PM
Colombo (News 1st) ரஷ்ய உற்பத்தியான Tor M1 ஏவுகணைத் தாக்குதலே ஈரானில் உக்ரைன் விமானம் வீழ்ந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என உக்ரைன் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனைத்தவிர, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் விமான விபத்து தொடர்பில் தற்போது ஈரான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ஈரானின் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட விமானம், பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் வீழ்ந்ததில் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் வீழ்ந்ததாக ஈரான் அறிவித்திருந்தாலும் ஏவுகணைத் தாக்குதலே அதற்குக் காரணம் என ஈரான் மீது சில நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் இரண்டு இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சில மணித்தியாலங்களின் பின்னர் இந்த விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்தை அமெரிக்க இராணுவ விமானமென தவறாகக் கருதி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், இதற்கு அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்தமை இதற்குக் காரணம் எனவும் அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ரஷ்யாவின் உற்பத்தியான Tor M1 ஏவுகணைத் தாக்குதலால் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக பென்டகன் மற்றும் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், அந்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது சந்தேகத்திற்குரியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் விமானம் வீழ்ந்ததில் 63 கனேடியப் பிரஜைகள் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இது ஏவுகணைத் தாக்குதலால் இடம்பெற்ற அனர்த்தம் என்பதற்கான புலனாய்வு அறிக்கையுள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டு காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுதாக உக்ரைன் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை ஈரான் சிவில் விமான சேவைத் திணைக்களம் நிராகரித்துள்ளது. இந்த பின்புலத்தில், வீழ்ந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியை அந்த விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் அல்லது அமெரிக்காவிற்கு வழங்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்க முறுகல் நிலையிலும், தமது மத்திய கிழக்கு விஜயத்தை இரத்து செய்யாதிருப்பதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தீர்மானித்துள்ளார். ஜப்பான் பிரதமர் இந்த வார இறுதியில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், ''அமெரிக்க நீதி'' எனவும் அதற்கு அவர் பெயரிட்டுள்ளார். ஈரான் இராணுவத் தளபதி சுலைமானின் கொலையை அடிப்படையாகக் கொண்டு டரம்ப் இவ்வாறு பெயரிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனினும், ஈரானுடன் யுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வலியுறுத்தியுள்ளனர்.