10,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிளுக்கு 28 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 09-01-2020 | 3:40 PM
Colombo (News 1st) 10,000 ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கான்ஸ்டபிள் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிரதிவாதிகளுக்கு 28 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனையை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன், அவர்களுக்கு தலா 25,000 ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த இருவரும், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் திகதி மறை இறைச்சியுடன் ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்காக அவரிடமிருந்து 10,000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளனர். சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், புத்தளம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்றத்திடம் மாத்திரமுள்ள நிதி அதிகாரங்களை மீறி, பொதுமக்களின் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய பெரும்பாலான உயர் அதிகாரிகள் சுதந்திரமாகவுள்ளனர். முன்னாள் பிரதமரின் செயலாளரான சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ரேணுகா ஏக்கநாயக்க, 5000 பசுக்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த வருடம் மே மாதம் அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 131 கோடி ரூபாவை முற்பணமாக வழங்கியிருந்தார். கடந்த வருடத்தில் பசுக்களை இறக்குமதி செய்வதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்யாதிருந்த நிலையிலேயே அவர் பணம் செலுத்தியிருந்தார். நிதி ஒதுக்கப்படாதிருந்த விடயமொன்றுக்காக முற்பணம் செலுத்த அல்லது முழுமையான கட்டணத்தை செலுத்துவதற்கு, பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையொன்றை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செயற்படாது, கிராமிய பொருளாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு வார காலங்களே இருந்த சந்தர்ப்பத்தில், அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 131 கோடி ரூபாவை ரேணுகா ஏக்கநாயக்க முற்பணமாக செலுத்தியுள்ளார். அவர் இவ்வாறு முற்பணம் செலுத்திய போதிலும், குறித்த 5,000 பசுக்களும் இதுவரையில் இறக்குமதி செய்யப்படவில்லை. அவ்வாறு எனின், அவுஸ்திரேலிய நிறுவனம் 131 கோடி ரூபாவை தன்னகத்தே வைத்துக்கொண்டு வட்டியையும் ஈட்டுகின்றது. இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் 70 ஆவது சரத்திற்கு அமைய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் ரேணுகா ஏக்கநாயக்க மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். எனினும், அவர் சேவையை நிறைவு செய்து, ஓய்வூதியத்தையும் பெற்று வருகின்றார்.