நாட்டைக் கட்டியெழுப்ப மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை

by Bella Dalima 09-01-2020 | 7:51 PM
Colombo (News 1st) நாட்டை முன்னேற்றத் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​கொழும்பில் இன்று வலியுறுத்தினார். சட்டத்தை வளைத்த நீதிமன்றம், அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களம், இரவு வேளையில் இளைஞர்களை விபத்திற்குள்ளாக்கி வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக அவர்களை மாற்றிய அரசியல்வாதிகள் இருக்கும் சமூகம் இதுவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். நீதிமன்றம் மற்றும் சட்டத்துறையில் நீதியை நிலைநிறுத்துவதே தமக்குள்ள சவால் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பொலிஸார் சட்டத்திற்கமைய செயற்பட இடமளிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், அவற்றிற்கான அடித்தளத்தை எதிர்வரும் பொதுத்தேர்தலில் இட வேண்டும் எனவும் கூறினார். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஓவியம் வரைந்த, மண்வெட்டியைக் கையில் ஏந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளையோர் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார் இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்டிருந்தார்.

ஏனைய செய்திகள்