ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: அமெரிக்கா

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு

by Bella Dalima 09-01-2020 | 7:09 PM
Colombo (News 1st) எவ்வித நிபந்தனைகளுமின்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் முக்கிய இராணுவத் தளபதியின் கொலையை நியாயப்படுத்தி அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் தற்காப்பிற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சுலைமானியின் கொலையை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு கருதி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அமெரிக்கா அதில் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டமையினாலேயே உக்ரைன் விமானம் விபத்திற்குள்ளானதாக வௌியாகும் தகவல்களை ஈரான் மறுத்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் விபத்திற்குள்ளானதாக ஈரானின் நெடுஞ்சாலை மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் மொஹமட் அஸ்லாம் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஈரான் அமெரிக்கா இடையில் தொடரும் பதற்றத்திற்கு மத்தியில் ஈராக்கிலுள்ள அவுஸ்திரேலியப் படைகள் மீள அழைக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போது, அமெரிக்கா - ஈரான் இடையில் தொடரும் பதற்றத்திற்கு மத்தியில் அவுஸ்திரேலியப் படைகள் மீளப்பெறப்படுமா என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலியப் படைகள் மீளப் பெறப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.