இலங்கை போக்குவரத்து சபையின் அதிரடி அறிவித்தல்

இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள அதிரடி அறிவித்தல்

by Staff Writer 09-01-2020 | 7:31 AM
Colombo (News 1st) போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பழைய பஸ்கள் தொடர்பில் ஆராயுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பழுதுபார்த்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பஸ்களை மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபடுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்குரிய அனைத்து பஸ்கள் தொடர்பிலும் தற்போது ஆராயப்படுவதாக கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். பதுளை, பசறை - மடுல்சீமை வீதியில் கடந்த 6ஆம் திகதி மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாகவே அனைத்து பஸ்களையும் சோதனைக்குட்படுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி குறித்து இதுவரை தமது அறிக்கை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 15 வருடங்களுக்கு மேல் பழமையான சுமார் 1000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.