by Staff Writer 09-01-2020 | 9:03 AM
Colombo (News 1st) லிபிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் போர் நிறுத்த அழைப்பை விடுத்துள்ளனர்.
யுத்தத்தில் ஈடுபடும் தரப்புகளுக்கு இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பர ஆதரவு வழங்கிவந்த நிலையில், மோதல் பல மாநிலங்களுக்கு பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருநாட்டுத் தலைவர்களுக்கு இடையில் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் போர் நிறுத்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
இதற்கிணங்க, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போர் நிறுத்தம் அமுலுக்கு வரவேண்டும் என துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விடுத்துள்ளனர்.
சிரிய உள்நாட்டுப் போரை போன்று லிபியாவிலும் போர் வலுப்பெறும் என ஜேர்மன் வௌிவிவகார அமைச்சர் Heiko Maas எச்சரித்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஆதரவுடனான லிபிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் துருக்கி, கடந்த வாரத்தில் தமது நாட்டுப் படையினரை அனுப்பியது.
அரச எதிர்ப்பு போராளிகளுக்கு உதவும் பொருட்டு ரஷ்யா சுமார் 2,500 கூலிப்படைகளை லிபியாவுக்கு அனுப்பியுள்ளதாக துருக்கி குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.