by Staff Writer 09-01-2020 | 8:26 AM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் (James Anderson) விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஜேம்ஸ் அன்டர்சன் உபாதைக்குள்ளானார்.
இதனால் எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அன்டர்சனின் வெற்றிடத்துக்குப் பதிலாக 25 வயதான கிரேக் ஓவர்டேனுக்கு இங்கிலாந்துக் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கிரேக் ஓவர்டேன் இறுதியாகக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜேம்ஸ் அன்டர்சன் நான்காமிடத்தில் நீடிக்கிறார்.
அவர் இதுவரையில் 574 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
அன்டர்சன் மேலும் 16 விக்கெட்களை கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளராக பதிவாவார்.
தென்னாபிரிக்க - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி போர்ட் எலிசெபெத்தில் ஆரம்பமாகவுள்ளது.