விமானத்தின் கறுப்புப் பெட்டியை  தர மறுக்கும் ஈரான்

உக்ரைன் விமான விபத்து: கறுப்புப் பெட்டியை கையளிக்க மறுக்கும் ஈரான்

by Chandrasekaram Chandravadani 09-01-2020 | 12:52 PM
Colombo (News 1st) விபத்துக்குள்ளாகிய உக்ரைன் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியை போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ கையளிக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான போயிங் - 737 ரக விமானம் ஒன்று நேற்று (08) விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேர் உயிரிழந்தனர். இந்த விமானமானது ஈரானிய தலைநகர் தெஹ்ரானிலுள்ள விமான நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை விதிகளின் கீழ், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஈரானுக்கு உரிமை உள்ளது. ஆனால், கறுப்புப் பெட்டிகள் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்கான திறன் சில நாடுகளுக்கே உள்ளதாக பொதுவாக சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியை அதன் உற்பத்தியாளரிடமோ அல்லது அமெரிக்காவிடமோ கையளிக்கப் போவதில்லை என ஈரானிய விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபேத்ஸடே (Ali Abedzadeh) கூறியுள்ளார். இந்த விபத்து தொடர்பில் ஈரானிய விமானப் போக்குவரத்து அமைப்பு விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் ஆனால், உக்ரைனைச் ​சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்கலாம் எனவும் Ali Abedzadeh மேலும் தெரிவித்துள்ளார்.