லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தி 

by Staff Writer 08-01-2020 | 8:34 PM
Colombo (News 1st)  சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இதுவரையில் தண்டனை வழங்கப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க தெஹிவளை - அத்திடிய வீதி ஊடாக வழமைபோன்று அலுவலகத்திற்கு பயணித்துக்கொண்டிருந்தார். அன்று காலை 10.25 மணியளவில் ஊடக சுதந்திரம் தொடர்பில் பாரியதொரு கேள்வியை எழுப்பி, லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். சிரேஷ்ட ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான லசந்த விக்ரமதுங்க பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்ட ஒருவராவார். நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சண்டே லீடர் பத்திரிகையை அவர் ஆரம்பித்தார். ஊடகவியலாளர் என்ற ரீதியில் அவர் மக்களுக்கு தகவல்களை வழங்கினார். ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்ற அவருக்கு, கொலை செய்யப்பட்ட பின்னரும் கூட மக்களுக்காக சேவையாற்றிய கீர்த்திமிக்க ஊடகவியலாளர் என்பதை பறைசாற்றும் வகையில் International Press Institute - World Press Freedom Heroes என்ற விருது வழங்கப்பட்டது. MTV - MBC ஊடக வலையமைப்பின் தெபானம கலையகம் தாக்கப்பட்ட நாளில் உடனடியாக அங்கு வருகை தந்த லசந்த விக்ரமதுங்க விடயங்களை ஆராய்ந்தார். லசந்த விக்ரமதுங்கவின் கொலையால் பொதுமக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிவில் அமைப்புக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியதுடன் , இந்த குற்றச்செயலை சர்வதேசத்தினர் வன்மையாகக் கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.