ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணை

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 08-01-2020 | 11:41 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் வேறு சில நபர்களுக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பான குரல் பதிவு குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இருவெட்டுக்களில் காணப்படும் விடயங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பகிரப்படும் குரல் பதிவுகள் ஆகியன குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களூடாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்