கொழும்பு, கண்டியில் பிளாஸ்டிக் துகள்கள் அதிகரிப்பு

கொழும்பு, கண்டி நகரங்களில் பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

by Staff Writer 08-01-2020 | 7:39 AM
Colombo (Newsw 1st) கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பட்டப்படிப்பிற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர், பேராசிரியர் H.M.T.G.A. பிட்டவல இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார். மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார். மிக நுண்ணிய அளவில் இந்தத் துகள்கள் காணப்படுவதால், சில சந்தர்ப்பங்களில் அவை சுவாசத்தினூடாக உட்செல்லக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதால் வளிமண்டலம் பாதிப்புக்குள்ளாகுவதுடன், நோய்த்தாக்கங்களும் ஏற்படக்கூடும் என பேராசிரியர் H.M.T.G.A. பிட்டவல சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கடந்த இரு வாரங்களான கொழும்பு நகர வளிமண்டலத்தில் தூசுக்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. எனினும், இடைக்கிடை நிலவும் மழையுடனான வானிலையால் தூசுக்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ் புவிசரிதவியல் நிபுணர் சரத் பிறேமசிறி குறிப்பிட்டுள்ளார். தற்போது வளிமண்டலத்தில் 40 தொடக்கம் 60 வரை தூசு துகள்களின் செறிவு தரச்சுட்டி காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.