by Staff Writer 08-01-2020 | 8:20 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்படும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல்பதிவு ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டமை தொடர்பில் இன்று நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி ஆஷா கஹவத்த அதனை தாக்கல் செய்தார்.
குறித்த குரல் பதிவுகளை ஊடங்கள் மூலம் பகிரங்கப்படுத்தியமை நீதிமன்ற செயற்பாடுகளுக்கு முரணானது என நகர்த்தல் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவும் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்ததுடன், குரல் பதிவு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவல வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இறுவெட்டுக்களில் காணப்படும் விடயங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்படும் குரல் பதிவுகள் ஆகியன குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து அறிக்கை பெறப்படவுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் வௌியானமை தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கோரிக்கை முன்வைத்தார்.
மேலும், கட்சி என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகல்கந்தே சுதத்த தேரர் இன்று களுத்துறையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி மற்றுமொரு குரல் பதிவை பகிரங்கப்படுத்தினார்.
புதுக்கடை இலக்கம் 1 முன்னாள் பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு இடையிலான குரல் பதிவே அது.