அமெரிக்க ஈரான் மோதலால் உலக பொருளாதாரம் பாதிப்பு

உலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் அமெரிக்க ஈரான் மோதல்

by Staff Writer 08-01-2020 | 7:50 PM
Colombo (News 1st) ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் உலக பொருளாதாரத்தில் தற்போது தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக துபாய் சந்தையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை 48 டொலராக இன்று பதிவாகியிருந்தது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையும் உயர்வடைந்துள்ளது. அதற்கமைய, Brent சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 70 டொலராக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், இது 1.4 வீத அதிகரிப்பாகும். இதேவேளை, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் மசகு எண்ணெய்யின் விலை அதிகபட்சமாக 4 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி ஒரு வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி தடையின்றி முன்னெடுக்கப்பட்டாலும் ஏதேனும் வகையில் சிக்கல் ஏற்பட்டால் மசகு எண்ணெய் சந்தையை நிலையாகப் பேணும் பொறுப்பை OPEC அமைப்பினால் ஏற்க முடியாது என அதன் பிரதம செயலாளர் இன்று கூறியுள்ளார். இதேவேளை, ஈரான் வான்பரப்பை தவிர்த்து பயணிப்பதற்கு சில நாடுகள் தீர்மானித்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. ஈராக்கிற்கு பயணிப்பது தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.